புஞ்சைபுளியம்பட்டியில் பரபரப்பு: பா.ஜ.க. பிரமுகர் கார் தீவைத்து எரிப்பு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
புஞ்ைசபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் காருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பா.ஜ.க. பிரமுகர்
கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள்மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையி்ல் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி. நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சிவசேகர் (வயது 55). இவர் பாரதீய ஜனதா கட்சியின் பிரசார பிரிவு நகர முன்னாள் தலைவர் ஆவார். மேலும் இவர் சொந்தமாக 5 கார்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை வைத்து டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
இவருடைய வீட்டின் முன்பு காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் தனக்கு சொந்தமான கார்களை நிறுத்தி வைப்பது வழக்கம்.
கார் தீப்பிடித்தது
நேற்று முன்தினம் இரவு அவருடைய வீட்டின் முன்பு அவருடைய ஒரு கார் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவில் அவருடைய கார் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அந்த கார் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அப்போது சிவசேகர் வீட்டின் உள்ளே அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். கார் தீப்பிடித்து எரிந்ததை கண்டதும், அக்கம் பக்கத்தினர் சிவசேகருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் பதறியடித்துக்கொண்டு தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தார். உடனே அவர் காரில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. மேலும் இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து சேதம் ஆனது.
கண்காணிப்பு கேமராவில்...
இதுபற்றிய தகவல் அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவைக்கப்பட்ட காரை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், 'அந்த பகுதி வழியாக 2 பேர் மோட்டார்சைக்கிளில் சென்றது,' தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து புஞ்சைபுளியம்பட்டியில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.