திருப்பரங்குன்றம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்- மோட்டார் சைக்கிளில் காரை மோதி வாலிபர் வெட்டிக்கொலை- 5 பேர் கும்பல் வெறிச்செயல்

மோட்டார் சைக்கிளில் காரை மோதி வாலிபரை கீழே தள்ளி அவரை 5 பேர் கும்பல் வெட்டிக்கொன்றது.

Update: 2023-10-16 20:37 GMT

திருப்பரங்குன்றம்


வெட்டிக்கொலை

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு- கருவேலம்பட்டி சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் நேற்று மதியம் மோட்டார்சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து ஒரு கார் சென்றது. அதில் 5 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கார் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு வாலிபர் கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 5 பேர், அந்த வாலிபரை சரமாரியாக வெட்டினர். அதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு வாலிபர் தப்பினார்

அந்த வாலிபருடன் வந்த மற்றொரு வாலிபர், அந்த கும்பலிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். மோட்டார் சைக்கிள் அங்கு தனியாக கிடந்தது. வாலிபரை வெட்டிக்ெகான்ற கும்பலை சேர்ந்தவர்கள் மீண்டும் காரில் ஏறி கருவேலம்பட்டி சாலையில் சென்றனர். இதற்கிடையே இந்த படுகொலை பற்றி தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்பது குறித்து நடந்த விசாரணையில் சற்று நேரத்தில் துப்பு துலங்கியது. அவர் நெலலை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார்(வயது 31) என தெரியவந்தது. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக ேபாலீசார் தெரிவித்தனர்.

காரணம் என்ன?

மேலும் போலீசார் கூறுகையில் "கடந்த 2022-ம் ஆண்டில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்த கிருஷ்ணகுமார் 2 மாதத்திற்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பாளையங்கோட்டை பகுதியில் அவருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் மதுரை திருப்பரங்குன்றத்துக்கு வந்து தகர செட் அமைப்பதற்கான வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணகுமார் சொந்தமாக தொழில் தொடங்க தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாடகை வீட்டுக்கு முன்பணம் கொடுத்துள்ளார். கருவேலம்பட்டி பகுதியில் தகர செட் அமைப்பதற்காக தனக்கன்குளம் நேதாஜி நகரை சேர்ந்த ஒருவருடன் ேநற்று வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோதுதான் கிருஷ்ணகுமார் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தனர். சம்பவ இடத்தை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கிருஷ்ணகுமார் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி, கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்