முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா

ரிஷிவந்தியம் பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.

Update: 2023-04-04 18:45 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே சூளாங்குறிச்சியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதேபோல் அத்தியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும், சிறிய அளவிலான தேரை இழுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அரியலூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழாவையொட்டி சிறப்பு பூஜை மற்றும் தேர்திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்