பங்குனி மாத கார்த்திகை உற்சவம்:முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பங்குனி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி முருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
கார்த்திகை உற்சவம்
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, பங்குனி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி, அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடந்தது. 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமான் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் குவிந்தனர்
கார்த்திகை உற்சவத்தையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
உற்சவ விழாவையொட்டி மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 7 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளி புறப்பாடு நடந்தது. இதில் 190 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொண்டனர். தங்கரதத்தில் உலா வந்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலைக்கேணி
நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திண்டுக்கல், நத்தம், துவரங்குறிச்சி, சாணார்பட்டி, செந்துறை, கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் அருகில் உள்ள காமாட்சி மவுனகுரு ஜீவசமாதி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் மண்டப வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.