மதுரையில் பரபரப்பு: கல்லூரி வாசல் முன்பு மாணவியின் தந்தையை தாக்கிய 6 வாலிபர்கள் கைது

மதுரையில் அரசு கல்லூரி வாசல் முன்பு மாணவியின் தந்தையை தாக்கிய 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-05 20:39 GMT


மதுரையில் அரசு கல்லூரி வாசல் முன்பு மாணவியின் தந்தையை தாக்கிய 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவியின் தந்தை மீது தாக்குதல்

மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம், பெரியசாமி நகரை சேர்ந்தவர் செந்தமிழ்பாண்டியன் (வயது 54). சம்பவத்தன்று இவர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படிக்கும் தனது மகளை வீ்ட்டிற்கு அழைத்து செல்வதற்காக சென்றார். அப்போது தத்தனேரி சுடுகாட்டிற்கு சவ ஊர்வலம் ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்தது.

அந்த ஊர்வலத்தில் வந்த சுமார் 10-க்கும் மேற்பட்டவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் அதிக ஒலி எழுப்பியும், அதி வேகமாகவும் அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர். அப்போது அங்கு கல்லூரி வாசல் முன்பு நின்று கொண்டிருந்த செந்தமிழ்பாண்டியன் அவர்களின் செயலை கண்டித்தார்.

உடனே ஊர்வலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

6 பேர் கைது

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் வழக்கில் தொடர்புடைய அச்சம்பத்து பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (19), அஜித்குமார் (22), நாகபிரியன் (20), ராமமூர்த்தி (26), சோமசுந்தரம் (26), சிவஞானம் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறார்கள்.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் கூறும் போது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவர் ஜெயந்தி விழா அன்று அத்துமீறி தனியார் கல்லூரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 10 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று சவ ஊர்வலத்தில் சென்ற சிலர் அத்துமீறி நடந்து கொண்டு, அதனை தட்டி கேட்டவரை தாக்கியதாக 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தோம். இதே போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடப்பவர்களை கைது செய்து அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்