அரசு தொடக்கப்பள்ளியை பெற்றோர் முற்றுகையால் பரபரப்பு

Update: 2023-08-10 19:30 GMT

மேட்டூர்:-

கொளத்தூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

முற்றுகை

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கருங்கல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ராஜா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கூடத்தில் மாணவிகளிடம் தனக்கு கை, கால்களை பிடித்து விடுமாறு வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் நேற்று பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரம் அடைந்த பெற்றோர்களில் ஒரு சிலர் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போரட்டத்திலும் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கொளத்தூர் போலீசார் முற்றுகை, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த அவர்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார், தலைமை ஆசிரியர் ராஜாவை போலீஸ் நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்