சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: அரை நிர்வாணத்துடன் விவசாயி தர்ணா போராட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அரை நிர்வாணத்துடன் விவசாயி தர்ணா போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-13 20:09 GMT

ஓமலூர் அருகே உள்ள எம்.ஓலைப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 35), விவசாயியான இவர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த தேசிய கொடிக்கம்பம் முன்பு திடீரென அரை நிர்வாணத்துடன் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அங்கிருந்த போலீசார் வேகமாக வந்து சசிக்குமாரை அப்புறப்படுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் சசிக்குமார் கூறும் போது, 'எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்துக்காக எனது நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். ஆனால் பணம் கொடுக்காமல் எனது நிலத்தை கிரயம் செய்து கொடு என்று அதிகாரிகள் அடிக்கடி தொல்லை கொடுத்து வருகின்றனர். எனது நிலத்தை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

மேலும் செய்திகள்