ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூடப்பட்டதால் கல்வியாளர்கள் வேதனை

திருவண்ணாமலை அருகே மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூடப்பட்டது. இதனால் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2023-10-18 18:45 GMT

வாணாபுரம்

திருவண்ணாமலை அருகே மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூடப்பட்டது. இதனால் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தொடக்கப்பள்ளி

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நரியாபட்டு. இந்த கிராமத்தின் துணை கிராமங்களாக சக்கரத்தாமடை, சோவூர், ஆயன்மலைபுதூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

சோவூரில் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

தனியார் பள்ளி மோகத்தால் இந்த பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து எண்ணிக்கையும் குறைந்து வந்தது. பல மாணவர்கள் வேறு பள்ளிகளை தேடிச்சென்று விட்டனர்.

மூடப்பட்டது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 முதல் 5-ம் வரை மூன்று மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டும் பாடம் நடத்தி வந்தார். மாணவர் சேர்க்கை குறைந்து வந்த நிலையில் இதனை அதிகப்படுத்த வட்டார கல்வித்துறையோ மாவட்ட கல்வித்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்தப் பள்ளியில் படித்த 3 மாணவர்களையும் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள நரியாபட்டு பள்ளிக்கு அனுப்பி விட்டனர்.

தொடர்ந்து பள்ளியும் மூடப்பட்டு விட்டது. மேலும் மூடியபள்ளி கட்டிடத்தின் முன் பகுதியில் உள்ள சுவரில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மூன்று மாணவர்கள் இருப்பதால் அவர்களை அருகில் உள்ள நரியாபட்டு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து எழுதி வைக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கூடம் மூடப்பட்டது சமூக ஆர்வலர்களையும் கல்வியாளர்களையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

நடவடிக்கை எடுப்பார்களா?

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்த நிலையில் தற்போது யாரும் வராததையடுத்து பள்ளியை மூடிவிட்டனர். இதனால் பள்ளி தற்போது கல்வி கற்கும் இடம் இல்லாமல் கால்நடைகள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ளாததின் விளைவுதான் தற்போது பள்ளியை மூடும் நிலைக்கு தள்ளியுள்ளது.

தமிழக அரசு ஏழை மாணவர்களும் நன்கு கல்வி கற்று எதிர்காலத்தில் வாழ்க்கையிலும் சமூகத்திலும் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என எண்ணி இலவச பாடப்புத்தகம், சீருடை, காலை உணவு, மதியம் சத்துணவு, மடிக்கணினி, இலவச பஸ் பாஸ் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாணவர்கள் கல்வி கற்க அனைத்து விதமான வசதிகளையும் செய்து தருகிறது. இதனை பயன்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி பள்ளியை வளர்ச்சி பெற செய்யாமல் அதிகாரிகள் செயல்படுவது வேதனைக்குரியது.

எனவே வரும் கல்வி ஆண்டிலாவது மாணவர் சேர்க்கை இயக்கத்தை நடத்தி பள்ளி தொடர்ந்து ெசயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்