கண்டமங்கலம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த பெண் சாவு குழாயை சரிசெய்ய தவறிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

கண்டமங்கலம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவை உடனே சரிசெய்ய தவறிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-09-02 18:45 GMT

கண்டமங்கலம், 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் புதுச்சேரி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

ஆனால் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷியாமளா (வயது 40) ஜமுனா (50) பிரகதி (7) ஆகிய 3 பேருக்கும் போதிய சிகிச்சை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நவமால் மருதூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் நேற்று முன்தினம் 2 முறை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த நிலையில் நேற்று காலை ஷியாமளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

இதற்கிடையே நவமால்மருதூர் காலனி பகுதியில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்ட நிலையில் அதனை உரிய நேரத்தில் பார்வையிட்டு சரிசெய்ய தவறிய காரணத்திற்காக, மாவட்ட கலெக்டர் பழனி அறிவுரைப்படி நவமால்மருதூர் ஊராட்சி செயலாளர் வாசுதேவன் என்பவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பெண் இறந்த சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்