பஞ்சாயத்து தலைவர், மகனுக்கு அரிவாள் வெட்டு

புளியம்பட்டி அருகே பஞ்சாயத்து தலைவரையும், அவரது மகனையும் அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-11-26 00:15 IST

புளியம்பட்டி:

புளியம்பட்டி அருகே முன்விரோதத்தில் பஞ்சாயத்து தலைவரையும், அவரது மகனையும் அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாயத்து தலைவர்

புளியம்பட்டி அருகேயுள்ள அக்கநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அய்யாதுரை (வயது 67). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மாடசாமி மகன் ரஞ்சி(32) என்பவருக்கும் இடையே ஒரு பிரச்சினையில் முன்விரோதம் இருந்து வருகிறதாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அய்யாதுரையும், அவரது மகன் கலாநிதி (40) ஆகிய இருவரும் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நடந்து கொண்டிருந்த பஞ்சாயத்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் ரஞ்சித் (32) என்பவர் மதுபோதையில் அங்கு வந்துள்ளார். அவர் திடீரென்று அய்யாத்துரையிடமும், கலாநிதியிடமும் வாய்த்தகராறு செய்துள்ளார்.

அரிவாள் வெட்டு

இதை தட்டிக்கேட்ட அவர்களுக்கும், ரஞ்சித்துக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அய்யாதுரையையும், அவரது மகன் கலாநிதியையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டாராம்.

ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாலிபர் கைது

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து ரஞ்சித்தை கைது செய்தனர். பஞ்சாயத்து தலைவரும், மகனும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்