கொளத்தூர் அருகே பஞ்சாயத்து தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கொளத்தூர் அருகே பஞ்சாயத்து பெண் தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 16 பவுன் நகை, பணத்தை திருடிச்சென்றனர்.;

Update:2022-10-12 13:53 IST

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் தென்பழனிநகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 79). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவருடைய மனைவி கிரிஜா (70). இவர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கொத்தகுப்பம் ஊராட்சி பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.

இவர்களுக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், தம்பதியர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சென்று விட்டனர்.

இதையடுத்து நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஜீவானந்தம் ராஜமங்கலம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்