நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக என்எல்சி நிலம் எடுப்பு விவகாரத்தில் பாமக வீண் வதந்தியை பரப்புகிறது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரத்தில் பா.ம.க. வீண் வதந்தியை பரப்புகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.;
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனம் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க போகிறது என்று பா.ம.க.வினர் கூறுகின்றனர். தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது. ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கின்ற அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் என்.எல்.சி. நில எடுப்பு பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு அப்பாவி விவசாய மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்.
வீண் வதந்தி
இதனுடைய பின்னணி என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலில் கடலூர், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற மக்களின் ஓட்டுக்காக வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர். மேலும் சிதம்பரம் தொகுதியை கைப்பற்றுவதற்காக சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாளையம், புவனகிரி, பாளையங்கோட்டை, சேத்தியாத்தோப்பு, சோழத்தரம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், வீராணம் ஏரியையும் என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்த போகிறது என மக்களிடம் தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஆட்சியில் நாங்கள் தான் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தெரியாத தகவல்கள் எல்லாம் அவர்களுக்கு எப்படி தெரிகிறது என புரியவில்லை. எனவே இது வீண் வதந்தி, ஓட்டுக்காக தான் இது போன்ற செயல்களில் பா.ம.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று தி.மு.க. உறுப்பினர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
2½ லட்சம் புதிய உறுப்பினர்கள்
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வினர் என்.எல்.சி. பிரச்சினைக்காக எதையும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினை, நிலம் எடுப்பு பிரச்சினை என எதையுமே கண்டுகொள்ளாமல் இப்போது போராட்டம் நடத்துகிறார்கள். கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்த்தல் ஆகிய பணிகளை பார்வையிட 5 தொகுதி பார்வையாளர்களை தலைமைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கிழக்கு மாவட்டத்தில் 2 லட்சத்து 50 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கடலூர், சிதம்பரம் ஆகிய 2 தொகுதியிலும் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தீர்மானங்கள்
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும், தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து கொண்டாடி நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் துரை.கி சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம், மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி, மாநகர செயலாளர் ராஜா, நகர செயலாளர்கள் சிதம்பரம் கே.ஆர்.செந்தில்குமார், வடலூர் தமிழ்செல்வன், குறிஞ்சிப்பாடி ஜெய்சங்கர், வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், கண்ணன் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.