பழனி கோவில் சொத்து வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திண்டுக்கல் மாவட்டம் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில்லுக்கு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பலர் 220 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். இந்த நிலங்களை கண்டறிந்து மீட்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், பழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து மீட்க பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவை அமைத்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்ததாகவும், ஆனால் அதன் பின்னர் இந்த விவகாரத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த போது, கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்பது தொடர்பாக அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த கூட்டத்தை பிப்ரவரி 1-ந்தேதி முதல் 9-ந்தேதிக்குள் கூட்ட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.