படுகர் இன மக்கள் நடைபயணம்
பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி படுகர் இன மக்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி நம்ம நீலகிரி, நம்ம தேசம் சார்பில், கோத்தகிரி பேரகணியில் இருந்து மக்கள் சந்திப்பு நடைபயணம் நேற்று தொடங்கியது. இதனை முன்னாள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சென்னமல்லன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரகணி ஊர் நிர்வாகிகள் மணி, ராமன், பெள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நடை பயண குழுவினர் சுந்தரமூர்த்தி, மஞ்சை வி.மோகன், சந்திரன் உள்பட ஏராளமானோர் நடைபயணமாக சுற்று வட்டாரத்தில் உள்ள படுகர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பேரகணி பகுதி கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.