பூச்சி தாக்குதலில் சிக்கி தவிக்கும் முன்பட்ட குறுவை பயிர்கள்

தஞ்சை மாவட்டத்தில் பூச்சி தாக்குதலில் சிக்கி தவிக்கும் முன்பட்ட குறுவை நெற்பயிர்களை பாதுகாக்க மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-04-25 19:15 GMT

தஞ்சை மாவட்டத்தில் பூச்சி தாக்குதலில் சிக்கி தவிக்கும் முன்பட்ட குறுவை நெற்பயிர்களை பாதுகாக்க மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

முன்பட்ட குறுவை

காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுவாக ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிகள் தொடங்கப்படும். ஆனால் ஆழ்குழாய், கிணறு, பம்புசெட் வசதியுள்ள விவசாயிகள் சற்று முன்கூட்டியே குறுவை சாகுபடிகளை தொடங்குவர். இதனை முன்பட்ட குறுவை சாகுபடி என அழைப்பர்.

அதன்படி தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை, மெலட்டூர், நரியனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பூச்சி தாக்குதல்

இதற்காக கடந்த மாதம் நாற்று நடப்பட்ட வயல்களில் தற்போது 30 நாட்கள் பயிராக நெற்பயிர்கள் வளர்ந்து நிற்கின்றன. இந்த நிலையில் நிலத்தின் தன்மை, காலநிலை மாற்றத்தால் தற்போது பயிர்களில் பூச்சி தாக்குதல் உள்ளது.

இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். மேலும், நோய்தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பயிர்களின் பாதுகாப்பு

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

பூச்சிகள் 2 வகையாக உள்ளன. வண்டு ரக பூச்சிகள் பயிரின் அடிப்பகுதியை சேதப்படுத்துகின்றன. இதனால் பயிர் நிலத்தில் உள்ள சத்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. புழு ரக பூச்சிகள் பயிரின் தண்டு பகுதியை முழுவதும் தின்கின்றன. இதனால் பயிர்கள் வளர்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதை தடுக்க மருந்து தெளித்தாலும், பூச்சிகள் சிறிது நேரம் மயக்கம் அடைகின்றன. பின்னர் மீண்டும் பயிர்களை தாக்கும் பணியை தொடங்குகின்றன. இதனால் மயங்கி மிதக்கும் பூச்சிகளை கைகளால் அகற்றி வெளியே எடுத்து போடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு முறையான தீர்வு காண விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிர்களை பாதுகாக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்