பழனிக்கு ஆட்டம், பாட்டத்துடன் வரும் பாதயாத்திரை பக்தர்கள்

பழனிக்கு ஆட்டம், பாட்டத்துடன் வரும் பாதயாத்திரை பக்தர்கள்

Update: 2022-12-31 19:00 GMT

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களில் பலர் மயில் காவடி, பால்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே பிப்ரவரி 3, 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வர். இந்நிலையில் வருகிற 27-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டியும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

இவர்கள் பழனிக்கு வந்த பின்பு சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடுகின்றனர். பின்னர் பாதவிநாயகர் கோவிலில் வழிபட்டு கிரிவலம் வருகின்றனர். அதன்பின்பு மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். இதில் கிரிவீதிகளில் பாதயாத்திரை வரும் பக்தர்கள் ஒயிலாட்டம், கோலாட்டம், தேவராட்டம் ஆகியவற்றை ஆடி கிரிவலம் வருகின்றனர். இதை ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று திண்டுக்கல்லை அடுத்த அய்யலூரை சேர்ந்த பக்தர்கள் உருமி மேள இசைக்கு ஏற்ப தேவராட்டம் ஆடி பழனி கிரிவீதியில் வலம் வந்தனர். மேலும் தற்போது பள்ளி விடுமுறை, வார விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் பழனியில் அதிகம் காணப்பட்டது. கூட்டம் காரணமாக தரிசன வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்