தொகுப்பு வீடுகள், வங்கி கடன் உதவி பெற்றுத்தரப்படும்

சாராய தொழிலில் இருந்து விடுபடுபவர்களுக்கு தொகுப்பு வீடு மற்றும் வங்கி கடன் பெற்றுத்தரப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

Update: 2022-10-12 18:06 GMT

சாராய தொழிலில் இருந்து விடுபடுபவர்களுக்கு தொகுப்பு வீடு மற்றும் வங்கி கடன் பெற்றுத்தரப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்குன்றம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்பதை தடுக்கக்கோரி கொட்டும் மழையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கூடநகரம் கிராமத்தில் தொடர்ந்து சாராயம் விற்பதாக வந்த தொடர் புகார்களின் பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உடனடியாக லிங்குன்றம் மற்றும் கூடநகரம் கிராமத்தில் சாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் லிங்குன்றம் மற்றும் கூட நகரம் கிராமத்தில் சாராய வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், லிங்குன்றம் கிராமத்திலும், கூடநகரம் கிராமத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொகுப்பு வீடு

குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களை கொண்டு சாராய தொழிலில் ஈடுபடுபவர்களை அழைத்து இத்தொழிலில் இருந்து விடுபட அறிவுரை கூறப்படும். தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாராய தொழிலில் இருந்து விடுபடுபவர்களின் வாழ்வாதாரத்திற்காக காவல்துறை சார்பில் தமிழக அரசின் உதவியுடன் தொகுப்பு வீடுகள் கட்டித் தரவும், வங்கி கடனுதவி, கறவை மாடுகள் வளர்க்க, சிறு தொழில் புரிய கடன் உதவி பெற்று தரப்படும். இத்தொழிலில் இருந்து விடுபடுபவர்களின் பிள்ளைகள் கல்விக்காக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், பாண்டியன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்