தேரோட்டம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூரில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் முதல் நேற்று முன்தினம் வரை இரவில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று தொடங்கியது. முன்னதாக காலையில் கோவிலில் திருக்கல்யாண உற்சவமும், பொங்கல் பூஜையும் நடந்தது. பின்னர் மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் மன்னாத சுவாமி, பச்சையம்மனுடன் எழுந்தருளினார். மாலை 5 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்த தேர் பூக்குழி மிதித்தல் பகுதி அருகே வந்து நின்றது.
தீமிதித்த பக்தர்கள்
அதனை தொடர்ந்து பூக்குழி மிதித்தல் நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற பக்தி பரவசத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் தங்களது குழந்தையை சுமந்து கொண்டு தீ மிதித்தனர். விழாவில் கோவில் குடிபாட்டு மக்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டமின்றி, அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் மங்களமேடு போலீசாருடன், பெரம்பலூர் மாவட்ட போலீசாரும் இணைந்து ஈடுபட்டனர். மேலும் பெரம்பலூரில் இருந்து கீழப்புலியூருக்கு சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட்டன.
இன்று திருவிழா நிறைவு
இன்று (சனிக்கிழமை) தேர் அருகே உள்ள மலையை சுற்றி வலம் வந்து நிலையை வந்தடையும். மாலையில் கொடி இறக்குதல், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், கீழப்புலியூர், கே.புதூர் ஆகிய கிராம மக்கள், குடிபாட்டு மக்கள் செய்திருந்தனர்.