பா.ஜனதா நிர்வாகி கார்- 7 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

திண்டுக்கல்லில், அதிகாலையில் பா.ஜனதா நிர்வாகி கார்- 7 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-24 19:00 GMT

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ். பா.ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாநகர தலைவராக இருக்கிறார். இவர் பழைய கார், மோட்டார் சைக்கிள்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக திண்டுக்கல்-தேனி சாலையில் குடைப்பாறைப்பட்டியில் அலுவலகம் வைத்துள்ளார்.

மேலும் பழைய வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக அலுவலகத்தின் பின்பகுதியில் தகரத்தால் குடோன் அமைத்துள்ளார். அந்த குடோனில் காரும், அதற்கு வெளியே 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி இருந்தார். இதுதவிர அலுவலகத்துக்கு உள்ளேயும் ஒருசில வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார்.

தீவைத்து எரிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அலுவலகத்தை மூடிவிட்டு பால்ராஜ் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அதிகாலை 3 மணி அளவில் அலுவலகத்தின் பின்னால் நிறுத்தி இருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பால்ராஜுக்கு தகவல் கொடுத்தனர். அதை கேள்விப்பட்ட பால்ராஜ் பதறியடித்துக்கொண்டு அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது குடோனுக்கு வெளியே நின்ற மோட்டார் சைக்கிள்கள் மட்டுமின்றி, குடோனுக்குள் நிறுத்தப்பட்டு இருந்த காரும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே கார், மோட்டார் சைக்கிள்களின் எரிபொருள் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் 10 அடி உயரத்துக்கு மேல் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

கார்- 7 மோட்டார் சைக்கிள்கள் நாசம்

இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் குடோனில் இருந்த கார், வெளியே நிறுத்தப்பட்டு இருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதுபற்றி திண்டுக்கல் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அதிகாலையில் மர்ம நபர்கள் வாகனங்களை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு ஓடுவது பதிவாகி இருந்தது. மேலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்துக்கு பின்னால் உள்ள தெருவில் இருந்து மர்ம நபர்கள் வந்து தீ வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடும் பணியில் இறங்கினர்.

சாலை மறியல்

இதற்கிடையே நகர தலைவர் பால்ராஜின் அலுவலகத்தில் நிறுத்தி இருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் தீ வைக்கப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்ட, பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குடைப்பாறைப்பட்டியில் திரண்டனர். பின்னர் வாகனங்களுக்கு தீ வைத்த நபர்களை கைது செய்யக்கோரி கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேலாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீஸ் குவிப்பு

அப்போது வாகனங்களுக்கு தீ வைத்த நபர்களை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனால் பா.ஜனதாவினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். எனினும் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜனதா அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் பா.ஜனதா நிர்வாகி அலுவலகத்தில் நிறுத்தி இருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்