பாலக்கோடு
பாலக்கோடு அருகே சிக்காரத்தனஅள்ளி கிராமத்தில் செல்லியம்மன்- செல்லப்பன் கோவில் திருவிழா 3 நாட்களாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று எருது விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிக்கார்த்தனஅள்ளி, மாக்கன்கொட்டாய், எண்டப்பட்டி, கோடியூர், மாதம்பட்டி உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேள தாளங்களுடன் கோ பூஜை செய்து புனிதநீர் காளைகளின் மீது தெளிக்கப்பட்டன. அதன் பின்னர் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி பாய்ந்து ஓடிய காளைகளை ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு விரட்டி சென்றனர். அப்போது கூட்டத்திற்குள் காளைகள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இந்த எருது விடும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.