தீபாவளி பண்டிகைக்கு புதிய ஆர்டர் கிடைக்குமா?

தீபாவளி பண்டிகைக்கு புதிய ஆர்டர் கிடைக்குமா?

Update: 2022-09-09 12:31 GMT

திருப்பூர்

வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக ஆடைகள் விற்பனையாகாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளி பண்டிகைக்காக புதிய ஆர்டர்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் திருப்பூர் தொழில்துறையினர் காத்திருக்கிறார்கள்.

உள்நாட்டு ஆடை தயாரிப்பு

உள்நாட்டு சந்தைக்காக பின்னலாடை ரகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூரில் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு கோடை, குளிர் பருவ காலங்கள், பொங்கல், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆடை தயாரிப்பதற்கான ஆர்டர் அதிகம் கிடைப்பது வழக்கம்.

பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை என்பது மிகவும் முக்கியமானது. நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து தீபாவளி பண்டிகைக்காக திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் கிடைக்கிறது. தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ் வழங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் சரிந்தது. அபரிமிதமான நூல்விலை உயர்வு, உள்நாட்டில் வர்த்தக பாதிப்பு போன்றவை காரணமாக ஏற்கனவே ஆர்டர் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர் குறைவாகவே உள்ளது.

திருப்பூரை நோக்கி இதுவரை புதிய ஆர்டர்கள் வருகை குறைவாகவே உள்ளதால் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், அதை சார்ந்த நிட்டிங், சாயஆலை, பிரிண்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட ஜாப்ஒர்க் தொழில் நிறுவனங்களும் கவலை அடைந்துள்ளன. தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1½ மாதங்களே இருப்பதால் பின்னலாடை தயாரிப்பு ஆர்டர்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொழில்துறையினர் உள்ளனர். நூல்விலையை உயர்த்தாமல் இருந்தால் கிடைக்கும் ஆர்டர்களை செய்து மீண்டும் தொழிலை பாதுகாக்க முடியும் என்பதே ஒட்டுமொத்த பின்னலாடைத்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆர்டர்கள் வரத்து இல்லை

இதுகுறித்து டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

வடமாநிலங்களில் கனமழை காரணமாக பனியன் தயாரிப்பு ஆர்டர்கள் வரத்து குறைவாக உள்ளது. அதுபோல் ஏற்கனவே தயாரித்து அனுப்பிய ஆடைகள் விற்பனையில்லாமல் வெளிமாநிலங்களில் பெருமளவு தேங்கியுள்ளது. மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து விட்டது. ஆடைகளுக்காக செலவு செய்வதை மக்கள் குறைத்து வருகிறார்கள். மேலும் கடந்த 2020-ம் ஆண்டு விற்கப்பட்ட ஒரு ஆடையின் விலை தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆடை விற்பனை என்பது மந்தநிலையில் உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய நிலையில் தீபாவளி பண்டிகைக்கான உள்நாட்டு ஆர்டர்கள் வந்து நடைபெற்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை ஆர்டர் வருகை என்பது மிக குறைவாகவே உள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கான ஆர்டர் வரத்தும் குறைந்து விட்டது. குறிப்பாக உக்ரைன்-ரஷியா போருக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகளில் ஆடை விற்பனை சரிந்து விட்டது. அமெரிக்காவில் கூட ஆடை விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் புதிய ஆர்டர்கள் வரவில்லை. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை எந்த அளவில் இருக்கும்என்று எங்களால் யூகிக்க முடியவில்லை. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் திருப்பூர் பின்னலாடை தொழிலை காப்பாற்ற தமிழக அரசு ஒரு கமிட்டி அமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்