வாணியாறு அணை நிரம்பியதால் உபரிநீர் திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாணியாறு அணை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி நேற்று அணைக்கு வினாடிக்கு 80 கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் 65.27 அடி உயரம் கொண்ட வாணியாறு அணையின் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது. அணை நிரம்பியதால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 80 கனஅடி உபரிநீர் வாணியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளான வெங்கடசமுத்திரம், மோளையானூர், ஜீவா நகர், மெனசி, பூதநத்தம் அம்மாபாளையம், பறையப்பட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
மேலும் பொதுமக்கள் வாணியாற்றில் இறங்குவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். வாணியாறு நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் வாணியாறு அணையில் தண்ணீர் தேக்கி வைத்து பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. இதன்மூலம் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுத்திரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கு, வலதுபுற கால்வாய் வழியாக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தனர்.