"பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்"

“பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என பாதயாத்திரையின்போது அண்ணாமலை பேசினார்.

Update: 2023-07-29 18:45 GMT

"பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என பாதயாத்திரையின்போது அண்ணாமலை பேசினார்.

நடைபயணம்

`என் மண், என் மக்கள், மோடியின் தமிழ் முழக்கம்' என்ற கோஷத்துடன் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் நடைபயணம் தொடங்கினார். நேற்று அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் ராமேசுவரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

பின்னர். ஏரகாடு கிராமத்தில் பா.ஜனதா நிர்வாகியான மீனவர் முருகன் என்பவரது வீட்டுக்கு சென்றார். அவரது குடும்பத்தினர், குழந்தைகளிடம் பேசினார். அப்போது, அவருக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுப்பதற்கு உதவுவதாக அண்ணாமலை தெரிவித்தார். மீனவர் வீட்டில் அண்ணாமலை தேனீர் அருந்திவிட்டு நடைபயணத்தை தொடர்ந்தார்.

ராமநாதபுரம்

பின்னர் நேற்று மாலை ராமநாதபுரம் வந்தார். வழிவிடு முருகன் கோவில் பகுதிக்கு வந்த அவரை மாவட்ட பா.ஜனதா தலைவர் தரணி முருகேசன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள், பெண்கள் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவில் முன்பு பூரண கும்பம் மரியாதை அளித்து, செங்கோல் வழங்கப்பட்டது.

அங்கிருந்து கேணிக்கரை, சிகில்ராஜவீதி, பெரியபஜார் வழியாக அரண்மனை பகுதிக்கு வந்தார்.. 3 மணி நேரம் நடந்து சென்று பொதுமக்களிடம் பேசி கருத்துக்களை அண்ணாமலை கேட்டறிந்தார். அவரிடம் ஏராளமானோர், பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ராமநாதபுரத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

தமிழை போற்றுகிறார்

கடந்த 9 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார், மோடி. அவர், தமிழகத்திற்கு தந்திருக்கக்கூடிய நிதி மட்டும் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி. வேறு எந்த மாநிலத்திற்கும் வராத நிதி தமிழகத்திற்கு வந்துள்ளது. ஏனெனில் பிரதமர் மோடி தமிழகத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். நம் தாய்மொழிக்கு ஒப்பான மொழி இந்த உலகத்தில் வேறு எங்குமே இல்லை. ஆனால் கடந்த 2014-க்கு முன்பு வரை யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை.

ஆங்கிலம் உள்ளிட்ட அயல்நாட்டு மொழியில் படிக்குமாறு கூறினர். பிரதமர் தமிழனாக பிறக்கவில்லை. ஆனால் தமிழை போற்றக்கூடிய மனப்பாங்கை அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 2 அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஒரு அமைச்சர் ரூ.41 கோடி அளவுக்கு கணக்கில் வராத நிதி வைத்துள்ளார். மற்றொரு அமைச்சரான செந்தில்பாலாஜியை காப்பாற்றுவதற்காக முதல்-அமைச்சர் பாடுபட்டு கொண்டிருக்கிறார்.. ஊழல் என்பது தமிழக அளவில் சாதாரண மக்கள் பேசும் அளவு நடந்து கொண்டிருக்கிறது. அனைத்திலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் 2024 தேர்தல் வருகிறது.

எங்களின் விருப்பம்

பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதற்கு பொன்னான வாய்ப்பு வருகிறது. இந்த ராமநாதபுரம் மண் பல வரலாற்று சிறப்புகள் கொண்டது. விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்து திரும்பி வரவைத்தது இந்த மண்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேசியவாதிகள் இருக்கக்கூடிய மண்.

இந்த யாத்திரைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு என்பது 3-வது முறையாக மோடியை பிரதமராக ஆட்சியில் அமர வைப்பதை உறுதியாக்கும் வகையில் உள்ளது. மோடி இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் விருப்பத்தை பிரதமருக்கு சொல்வது எங்கள் பொறுப்பு. நீங்கள் விரும்பியது போல நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.

மோடியை எதிர்த்து 17 எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஒன்றாக கூட்டம் நடத்துகின்றனர். அனைவரும் ஊழல்வாதிகள். புலிக்குட்டியை பார்த்து பூனைக்குட்டி சூடுபோட்டு கொண்டதை போல இந்தியாவை நேசிக்காதவர்கள் இந்தியா என்று பெயரை வைத்துள்ளார்கள். எங்களின் பிரதமர் எந்நாளும் நரேந்திரமோடி. ஆனால், உங்கள் கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியுமா? தமிழகம் முழுவதும் தேசியத்தை கொண்டு செல்வதுதான் இந்த யாத்திரையின் நோக்கம்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

முன்னதாக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் வரவேற்று பேசினார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.. கருப்பு முருகானந்தம், பொன் பாலகணபதி, ஜி.பி.எஸ். நாகேந்திரன், மாவட்ட பொறுப்பாளர் முரளிதரன், நிர்வாகிகள் மணிமாறன், நகர் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் கார்த்திகேயன், கவுன்சிலர் குமார், மாநில நிர்வாகிகள் வேலூர் இப்ராகிம், நரேந்திரன், ஆத்மா கார்த்தி, அமர் பிரசாத் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிகுழுவினரை அண்ணாமலை சந்தித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்