தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்எஸ்எஸ் , பாஜக போன்ற அமைப்புகள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது - வானதி சீனிவாசன்

தீண்டாமை ஒழிப்பில் ஆர்ப்பாட்டமில்லாமல், அரசியல் செய்யாமல் களப்பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகளை ஆதரிக்க வேண்டும் என கூறினார்.

Update: 2022-08-20 15:15 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூரில் பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய மகளிர் அணியின் தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

தி.மு.க. தலைவர் மற்றும் அக்கட்சியின் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தாலும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் கூட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தி.மு.க. அரசு ஒரு தரப்பு மக்களுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

திருமாவளவனின் இலக்கு எப்போதும், இந்து கோவில்கள் மற்றும் இந்துக்களின் நம்பிக்கைகள் மட்டும் தான். அவர் இதர மத நம்பிக்கைகளை, செயல்பாடுகளை கண்டுகொள்ள மாட்டார். தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தீண்டாமை ஒழிப்பில் ஆர்ப்பாட்டமில்லாமல், அரசியல் செய்யாமல் களப்பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகளை ஆதரிக்க வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. திருமாவளவன் யாரை திருப்திபடுத்துவதற்காக, எதைப் பெறுவதற்காக இந்து மதத்தை தொடர்ந்து விவர்சித்து வருகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

போதை பொருள் ஒழிப்பு குறித்து தமிழக முதல்வர் மிகவும் தீவிரமாக பேசி வருகிறார். ஆனால், மறுபுறம் அரசே டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்கிறது. இது தி.மு.க.வின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. தி.மு.க. என்றாலே இரட்டை வேடம் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்