படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்
படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம் குறித்து இயற்கை ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளார்.
விளைச்சலை அதிகரிக்க தற்போது அதிகளவில் ரசாயன உரங்களை பயன்படுத்தும் கட்டாயப் மனப்போக்கு விவசாயிகளிடம் வளர்ந்து வருகிறது. அதுபோல் முழு விளைச்சல் அடையும் முன்பே காய்களை பறித்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் ஆபத்தான மனப்போக்கும் சில வியாபாரிகளிடம் அதிகரித்து வருகிறது.
இதனால் எங்கும் ரசாயனம் எதிலும் ரசாயனம் என்ற நிலை உருவாகி, நாம் உண்ணும் உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் நஞ்சாக மாறி வருகின்றன. இயற்கையோடு மனிதர்கள் இணைந்து வாழ்ந்தபோது ஆபத்துகள் பெரிதாய் வந்தது இல்லை. அவர்கள் செயற்கையோடு கைகோர்த்தப்பிறகு ஆபத்துகளுக்கு பஞ்சமே இல்லை.
இப்போது மக்கள் இதை உணரத்தொடங்கி விட்டார்கள். படித்தவர்கள் மத்தியில் இதில் ஓர் எழுச்சியும் ஏற்பட்டு வருகிறது. அவர்களில் பலர் குழுக்களாக செயல்பட்டு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை அறிகிறபோது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
இளைஞர்களிடையே விழிப்புணர்வு
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்களின் கருத்துக்களை பார்ப்போம்.
விழுப்புரத்தை சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலர் பாண்டியன்:-
ரசாயன உரத்தால் விவசாயத்தில் இருந்து பாதிக்கப்பட்டு அன்றாடம் நோய்க்கு இளையதலைமுறைகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு தீர்வாக இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் அவர்கள், தமிழகமெங்கும் பிரசாரத்தை மேற்கொண்டு நடத்தி வந்தார். அதற்கான பயிற்சிகளும் நடத்தி வந்தார்.
அவர் நடத்திய பிரசாரம், பயிற்சிகளின் மூலமாக தமிழகத்தில் பட்டதாரி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாப்ட்வேர் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் வேலை செய்த நிலையிலும், வெளிநாடு சென்ற இளைஞர்கள் பலர், இயற்கை விவசாயத்தில் அடியெடுத்து வைத்து நல்ல உணவையும் நல்ல வருமானத்தையும் பார்த்து வருகின்றனர். இதில் ஒரு சில பேர், சரியான முறை தெரியாமல் வந்த வேகத்தில் பின்னோக்கி சென்று விட்டனர். ஆனால் சரியான பயிற்சியும், சரியான விற்பனை வாய்ப்பும் தெரிந்துகொண்டு ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், இயற்கை விவசாயத்தை ஏற்று ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பரிய விதைகளை கொண்டும் இயற்கை விவசாயத்தில் முழுமையாக முழு நம்பிக்கையோடு செய்து வருகின்றனர்.
நாட்டின் முதுகெலும்பு
மேல்மலையனூர் அருகே கஞ்சமலை புரவடையை சேர்ந்த இயற்கை விவசாயி சேகர்:-
இயற்கையாக கிடைக்கும் பொருட்களில்தான் சத்துக்கள் அதிகமாக உள்ளது என்பதை இளையதலைமுறையினர் உணரத்தொடங்கி விட்டனர். அதனால் இன்று படித்த இளைஞர்களையும், இயற்கை விவசாயம் செய்ய தூண்டி இருக்கிறது. இந்த ஆர்வம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம் கொரோனாதான். ஏனெனில் அப்போதுதான் இயற்கை பொருட்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது என்பதையும், பெரும்பாலானோர் வேலை இழந்தபோதும் இந்த இயற்கை விவசாயம் செய்ய முற்பட்டனர். எந்திர வாழ்க்கையை வாழ முற்படாமல் இன்று நிம்மதியாக விவசாயம் செய்யலாம், யாருக்கும் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை இன்றைய படித்த இளைஞர்கள் உணரத் தொடங்கி விட்டனர். ஆகையால் விவசாயம் செய்ய தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் இயற்கை விவசாயம் செய்ய இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
மூலிகை செடிகள்
திண்டிவனம் ஓய்வு பெற்ற ஆசிரியர் மூலிகை உற்பத்தியாளர் சுந்தரகாந்தி:-
எனது தந்தையுடன் சிறு வயது முதலே விவசாயம் செய்து வந்ததால் விவசாயம் எனது உயிராகும். ஆசிரியர் பணிக்கு சென்ற பிறகும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவசாயத்தில் ஆர்வம் குறையாமல் தொடர்ந்து செய்து வருகிறேன். இதில் முக்கியமானதாக மூலிகை செடிகள் உற்பத்தி செய்து பலருக்கும் உதவிடும் வகையில் விவசாயத்தை பயன்படுத்தி வருகிறேன். விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயம் இல்லாமல் எந்தவொரு நாடும் தன்னிறைவு பெறாது. இதை புரிந்து கொண்டதால்தான் விவசாயத்தை என்னால் கைவிட முடியவில்லை. மேலும் மக்களுக்கு உதவிடும் வகையில் மூலிகை செடிகளை வளர்த்து இலவசமாக அனைவருக்கும் மூலிகைகளை வழங்கி வருகிறேன். என்னைப்போல் பலரும், படித்தவர்களும் விவசாயத்தை கைவிடாமல் தொடர்ந்து செய்து வருவது நமது நாட்டிற்கு அவர்கள் செய்யும் உதவியாகும்.
நல்ல மகசூல் கிடைக்கும்
செஞ்சியை சேர்ந்த மதியழகன்:-
முன்பெல்லாம் விவசாயிகள் குடும்பத்துடன் சேர்ந்து விவசாயம் செய்வார்கள். ஆனால் இப்போது ஆட்களை வைத்து விவசாயம் செய்கின்ற நிலைமை இருக்கிறது. தற்போது . செஞ்சி பகுதியில் அதிகமான இடங்களில் படித்த பட்டதாரிகள் ஆர்வமுடன் விவசாயம் செய்து வருகிறார்கள். அதிலும் இயற்கை விவசாயம் என்ற முறையில் பல்வேறு சாதனைகளும் புரிந்து வருகிறார்கள். இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து அனைவரும் விவசாயம் செய்தால் அவர்களுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். இன்னும் படித்த பட்டதாரிகள் விடுமுறை நாட்களில், இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாகும்.
நஞ்சில்லா நல்ல உணவு
தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான வக்கீல் தேவராணி:-
நான், வக்கீலாக பணியாற்றியபோது நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத்தால் ஈர்க்கப்பட்டேன். அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக திம்மலை கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். பாரம்பரிய நெல் ரகங்களான குதிரைவாலி, யானை கவுனி உள்ளிட்ட நெல் ரகங்களையும், மணிலா, எள் உள்ளிட்ட பயிர்களையும், காய்கறிகளையும் சாகுபடி செய்துள்ளேன். இந்த பயிர்களுக்கு அடியுரமாக தொழுஉரம் இடப்படுகிறது. மேலும் பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம் உள்ளிட்ட ஊட்டச்சத்து கரைசல்களும், வேப்ப எண்ணெய், 3 ஜி கரைசல் உள்ளிட்ட பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்துகிறேன். செயற்கை உரம் போட்டு விவசாயம் செய்த நிலத்தில் முதன்முறையாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டபோது விளைச்சல் குறைவாக இருந்தது. அதன்பிறகு 3 ஆண்டுகளில் விளைச்சல் அதிகரித்தது. இவ்வாறு இயற்கை முறையில் விளைவிக்கும் நெல் மற்றும் காய்கறிகளின் ருசி அதிகம். இவ்வாறு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு நஞ்சில்லா நல்ல உணவு பொருட்களை விளைவிப்பது எனக்கு முழுமையான மன நிறைவை தருகிறது. ஏற்கனவே விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை, கூலி அதிகம் உள்ளிட்ட பலவேறு இடர்பாடுகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இயற்கை முறையில் பயிரிடப்படும் நெல் மற்றும் காய்கறிகளுக்கு நிரந்தர விலை மற்றும் விற்பனை சந்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் விதை நெல், இயற்கை உரங்கள், ஊட்டச்சத்து மற்றும் பூச்சிவிரட்டி கரைசல் மற்றும் நெல் உரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களையும் அரசு மானியத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் பலரும் இயற்கை விவசாயம் செய்யும் முன் வருவார்கள்.