பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மனு: எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
ஓபிஎஸ் தரப்பு கோர்ட்டில் முறையிட்டுள்ளதையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுக மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.;
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது, அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, நாளை மாலை 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே எடப்பாடி பழனிசாமி, போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிடும்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். விடுமுறை தினமான நாளை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்பு நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இந்த மனுவை நாளை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உள்ளார்.
ஓபிஎஸ் தரப்பு கோர்ட்டில் முறையிட்டுள்ளதையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுக மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். கோர்ட் மூலம் முட்டுக்கட்டை போட நினைக்கும் ஓபிஎஸ் தரப்பு முயற்சியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.