பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில்நான்கு வழிசாலையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

Update: 2023-08-09 19:45 GMT
பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில்நான்கு வழிசாலையில் சுங்கச்சாவடி அமைக்க  எதிர்ப்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில் நான்கு வழிசாலையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுங்கச்சாவடி

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் முதல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வரையிலான நான்கு வழிசாலை பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், ஊத்தங்கரை வழியாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அ.பள்ளிப்பட்டி முதல் திருப்பத்தூர் வரை நான்கு வழிசாலை பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் எச்.புதுப்பட்டி அருகே நான்கு வழிசாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி ஆகியோர் மற்றும் பொதுமக்கள் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் நடத்துவோம்

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை அழைத்து சாலை பணி முடிவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது சுங்கச்சாவடி அமைப்பது முறையானது அல்ல. இந்த சங்கச்சாவடி அமைத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஒருவேளை சுங்கச்சாவடி அமைப்பதாக இருந்தால் சாலை அமைக்கும் பணியின் போது சுங்கச்சாவடியையும் அமைத்து இருக்கலாம். சுங்கச்சாவடி அமைக்கும் பணியை கைவிடாமல் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துவோம் என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், மதிவாணன், நகர செயலாளர்கள் தென்னரசு, பாபு (எ) அறிவழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்