கோவை, ஜூலை
நீலாம்பூர் அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முன்னதாக மனு அளிக்க வந்து இருந்த பொதுமக்களை அவர்கள் இருந்த இடத்துக்கே சென்று மனுக்களை பெற்றார்.
இதில் பொதுமக்கள் பட்டா, சாலை வசதி உள்பட பல்வேறு தேவைகள் குறித்து மனுக்களை அளித்தனர். இதில் கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே அரசூர் சங்கோதிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அப்பகுதியில் டாஸ்மாக் கடை மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். இதுபோல் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இலவச பட்டா வழங்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த மனுவில், கோவை குறிச்சி, பிள்ளையார்புரம், குனியமுத்தூர், இடையர்பாளையம் பகுதிகளில் தினக்கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், இந்துக்கடவுள் காளி புகைப்பிடிப்பது போன்று அவதூறாக சித்தரித்து ஆவணப்படம் தயாரித்த ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருநங்கைகளை விடுவிக்க வேண்டும்
கவுண்டம்பாளையம் ஆனைமலையம்மன் தெருவில் 60-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். கடந்த 7-ந் தேதி இரவு 11 மணியளவில் 2 திருநங்கைகள் கவுண்டம்பாளையம் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது அங்கு வந்த 3 வாலிபர்கள் திருநங்கைகளிடம் தகாத முறையில் நடக்க முயன்று ஒரு திருநங்கைக்கு காயத்தை ஏற்படுத்தினர். இதில் திருநங்கைகளுக்கும், அந்த நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது அதில் ஒருவர் 2 திருநங்கைகளையும் தாக்கினார். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் திருநங்கைகளை தாக்கிய வாலிபரை அங்கு வந்த ரோந்து போலீசார் அடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இது அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி துடியலூர் போலீசார் எங்கள் பகுதிக்கு வந்து 7 திருநங்கைகளின் விவரங்களை சேகரித்து சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் 7 திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ்நிலையம் அழைத்து சென்றனர். இதுகுறித்து கேட்டபோது நீங்கள் தாக்கியதில் அந்த வாலிபர் உயிரிழந்தார் என்றும், அதற்கு திருநங்கைகள் தான் காரணம் என்று கூறுகிறார்கள். எந்த தவறும் செய்யாத 7 திருநங்கைகளையும் விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.