புகழூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டும் விவசாயிகளை வேறு ஆலையுடன் இணைக்க எதிர்ப்பு; மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு

புகழூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டும் விவசாயிகளை வேறு ஆலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் மனு கொடுத்தனர்.

Update: 2022-10-28 21:38 GMT

புகழூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டும் விவசாயிகளை வேறு ஆலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் மனு கொடுத்தனர்.

சர்க்கரை ஆலை

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார். அப்போது புகழூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சண்முகராஜ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அனைத்து விவசாயிகளும் கையில் கோரிக்கை குறித்த பதாகைகள் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

அறச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளாகிய நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஈ.ஐ.டி. பாரி புகழூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்து அனுப்பி வருகிறோம். இந்த சர்க்கரை ஆலையானது கரும்பு வெட்டிய உடன் கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின்படி 15 நாட்களுக்குள் பணத்தை முறையாக வழங்கி வருகிறது. கடந்த 30 ஆண்டு காலத்தில் ஒரு முறை கூட சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை நிலுவையில் வைத்ததில்லை.

விருப்பத்திற்கு மாறாக...

மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு பயிர் செய்வதற்கான அனைத்து வகை உதவிகளையும் விவசாயிகளுக்கு செய்து வருகிறது. பாரி சர்க்கரை ஆலையின் முறையான நிர்வாகத்தின் கீழ் இருக்கும் அறச்சலூர் வட்டார பகுதி விவசாயிகளை விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக மற்றொரு சர்க்கரை ஆலையோடு இணைத்து சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணையாளர் ஆணையிட்டுள்ளார். மற்றொரு சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக மற்றொரு சர்க்கரை ஆலை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும். எனவே தாங்கள் தயவு கூர்ந்து இந்த பிரச்சினையில் இருந்து எங்களை விடுவித்து நாங்கள் எப்போதும் போல் புகழூர் சர்க்கரை ஆலையுடனேயே இணைந்து இருக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்