செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

மேல்புறம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-10 18:45 GMT

களியக்காவிளை:

மேல்புறம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்போன் கோபுரம்

மேல்புறம் அருகே உள்ள மதில்தாணி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். உள்பட ஒரு சில செல்போன் கோபுரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள ஒருவரின் நிலத்தில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் புதிதாக கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அனுமதிபெறாமல் இந்த பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நேற்று காலை அந்த பகுதியில் திரண்டனர். பின்னர், அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், பொதுமக்களின் கையெழுத்துக்கள் அடங்கிய புகார் மனு அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றும், செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்