தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள்: உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அனைத்து அலுவலர்களும் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Update: 2024-10-23 14:18 GMT

சென்னை ,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (23.10.2024) முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கிராமப்புற பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்காக மகளிர் சுய உதவிக்குழு என்ற அமைப்பை 1989-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருனாநிதியால் தர்மபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது பல்லாயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழுவினர் குழுவாக செயல்பட்டு வங்கிக் கடன் பெற்று பொருட்கள் உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது மிகவும் தொழில் முனைவோராக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 4.73 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 53.94 லட்சம் உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 7.5.2021 முதல் இதுநாள் வரை தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 95,109 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களை பரிசோதிப்பதற்காக தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சுகாதார துறையுடன் ஒருங்கிணைந்து 388 வட்டாரங்களிலும் 10,969 சுய உதவிக் குழு மகளிருக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய சுய உதவிக் குழு மகளிரின் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

மாணவர்களின் கல்விக்கு உணவு ஒரு தடையாக இருக்க கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 32,364 பள்ளிகளில் 15,16,128 மாணவ-மாணவியர் பயன் பெறும் வகையில் 50,985 சுய உதவிக் குழு மகளிர் காலை உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழுவினரின் தயாரிப்புகள் அதிக அளவில் விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 42 கண்காட்சிகள் மூலம் 1,099 சுய உதவிக் குழுக்கள் ரூ.3.75 கோடி மதிப்பிலான உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இயற்கை அங்காடி மூலம் 29 கண்காட்சிகளில் 1,171 சுய உதவிக் குழுக்கள் பங்கேற்று ரூ.59.17 லட்சம் மதிப்பிலான உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் செயல்பட்டு வரும் மதி அங்காடிகள் மூலம் ரூ.2.42 கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 100 மின் வாகனங்களில் செயல்பட்டு வரும் மதி நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.82.65 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை அதிக அளவில் சந்தை படுத்துவதற்காக www.mathisandhai.com என்ற மதி சந்தை விற்பனை இணைய தளம் தொடங்கப்பட்டு 18.11.2023 அன்று முதல் செயல்பட்டு வருகின்றது. மேலும் முன்னணி மின்னணு வர்த்தக சேவை நிறுவனங்களான அமேசான், பிளிப்காட், மீசோ, பூம், ஜெம், இந்தியாமார்ட், டிரேட் இந்தியா மற்றும் பூஸ்ட் 360 ஆகியவற்றில் சுமார் 1,039 மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 36 ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 92,016 ஊரக இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டதுடன், 50,841 இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு, சுய வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 490 இளைஞர் திறன் திருவிழாக்கள் மூலம் 40,214 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு அரசு திறன் திட்டங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 731 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1,01,674 இளைஞர்கள் வெவ்வேறு தொழில் நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 45,043 நகர்ப்புர இளைஞர்களுக்கு 76.60 கோடி ரூபாய் செலவில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன்வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு, 32,431 இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 7.5.2021 முதல் 3,235 உற்பத்தியாளர் குழுக்களுக்கு தொடக்க நிதியாக ரூ. 24.26 கோடி நிதியும், 760 தொழிற் குழுக்களுக்கு தொடக்க நிதியாக ரூ. 5.70 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மையம் மற்றும் புதிய தொழில் உருவாக்க மையம் திட்டங்கள் உள்பட அனைத்து திட்டங்களையும் ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகையையொட்டி மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்து வரும் சுவையான இனிப்பு மற்றும் கார வகைகள் மதி தீபாவளி பரிசு பெட்டகம் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மதி தீபாவளி பரிசு பெட்டகத்தை அதிக அளவில் மக்கள் வாங்கி பயன்பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களினால் ஏற்பட்ட விளைவுகளால் பணிக்கு செல்லும் மகளிர் அதிகம் உள்ள மாநிலங்களில் முதலாவதாக தமிழ்நாடு திகழ்கின்றது. பெண்கள் மேலும் உயர்ந்த நிலையை அடைய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அனைத்து அலுவலர்களும் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., மற்றும் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்