ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கலக்கும் கழிவு நீர் - மதுரை ஐகோர்ட்டு கிளை சரமாரி கேள்வி
நகராட்சி ஆணையர் விசாரணை நடத்தி பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
ராமேஸ்வரத்தில் பக்தர்களால் புனிதமாக கருதப்படும் அக்னி தீர்த்தக் கடல் அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலக்கப்படுவதால், கடல் நீர் அசுத்தமாகிறது என்றும், இதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சுப்பிரமணியன், நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அக்னி தீர்த்தத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுகள் எங்கே செல்கிறது? அவை மீண்டும் கடலில் கலக்கப்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், சுத்திகரிப்பு நிலையம் எவ்வாறு செயல்படுகிறது? சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் கழிவுகள் என்ன செய்யப்படுகின்றன? என்பது தொடர்பாக நகராட்சி ஆணையர் விசாரணை நடத்தி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.