அண்ணாமலை பாதயாத்திரைக்கு எதிர்ப்பு:ஆதித்தமிழர் கட்சியினர் 8 பேர் கைது
அண்ணாமலை பாதியாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தமுயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை நேற்று மாலையில் கோவில்பட்டியில் தொடங்கினார். இந்த பாதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக ஆதித்தமிழர் கட்சியினர் அறிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று அதிகாலையில் தீர்த்தம்பட்டியிலுள்ள வீட்டில் அக்கட்சி மாவட்ட செயலாளர் நம்பிராஜனை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் அக்கட்சி மாவட்ட துணை தலைவர் முத்துராஜ் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் காளிமுத்து, விளாத்திகுளம் ஒன்றிய நிதி செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சக்திவேல், கயத்தாறு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் கோவில்பட்டி அம்பேத்கர் சிலை முன்பு கருப்புக்கொடியுடன் கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடந்த வந்தனர்.
இவர்களை கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.