புதன்கிழமை தோறும் மீண்டும் மனு அளிக்க வாய்ப்பு
பொதுமக்களின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், புதன்கிழமை தோறும் மீண்டும் மனு அளிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் புகார் மனு
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. இதற்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் எதிரே தனியாக அறை அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு காலை முதல் மதியம் வரை 5-க்கும் மேற்பட்ட போலீசார் புகார் மனுக்களை பெறுகின்றனர். அவ்வப்போது போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனும், மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று வருகிறார்.
இவ்வாறு பெறப்படும் புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் ஒருசிலர் தங்களுடைய புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மீண்டும் வந்து மனு கொடுக்கின்றனர். அதுபோன்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.