கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

Update: 2023-02-15 17:52 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கஞ்சா விற்பனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின்படி 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனங்கள் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயானக்கொள்ளை திருவிழா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடந்த வருடம் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி அருகாமையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், சிறிய குழந்தைகளிடம் கொடுத்து பள்ளியில் உள்ள மற்றவர்களுக்கு சென்று சேர்வதாக தகவல் வருகிறது. இவைகளை முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்களை வைத்து கண்காணித்து, காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பிரச்சினை உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். அரசு புறம்போக்கு இடங்களில் பேனர்கள் வைக்கக் கூடாது. அவ்வாறு இருக்கும் இடங்களில் உடனடியாக அகற்றிட வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் போதிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்குகிறதா? அவசரக்கால ஒலிப்பான்கள் இயங்குகிறதா என்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இரவு ரோந்து பணிகள் முறையாக நடைபெறுவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்