சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் விரைவில் பஸ்கள் இயக்கம் -மாநகராட்சி ஆணையாளர்
சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில்இருந்து விரைவில் பஸ்கள் இயக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்
சேலம்
சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து விரைவில் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
சேலம் மாநகராட்சி பழைய பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றி கடந்த 11-ந் தேதி முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து எப்போது பஸ்கள் இயக்கப்படும் என்று பொதுமக்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், புதிய ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து விரைவில் பஸ்களை இயக்குவது தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்துறை, தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை
இக்கூட்டத்தில், டவுன் பஸ்கள், தனியார் பஸ்களை முறைப்படுத்தி கீழ் தளத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் தொடர்பாகவும், மேல்தளத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் தொடர்பாகவும், விரைவில் பஸ் நிலையத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது/
மேலும், மேல்தளத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களை பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையிலும், பயணிகள் எளிதாக வந்த செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
விரைவில் பஸ்கள் இயக்க...
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் பேசுகையில், ஈரடுக்கு பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு விரைந்து முடித்திட வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பஸ் நிலையத்தில் இருந்து விரைவில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும், என்றார்.
கூட்டத்தில் துணை ஆணையாளர் அசோக்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவி, போலீஸ் உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், உதயகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தை சார்ந்த விவேகானந்தன், வட்டார போக்குவரத்து துறையை சார்ந்த மாலதி, தாலுக்கா பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மணி, தலைவர் நடராஜன், இணைச்செயலாளர் ராஜா மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.