களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் தண்ணீர் திறப்பு

பயிர் சாகுபடிக்கு களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.

Update: 2023-02-24 20:12 GMT

களக்காடு: களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பயிர் சாகுபடிக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையில் நேற்று காலையில் 17.50 அடி தண்ணீர் இருந்தது.

அணையில் இருந்து பயிர் சாகுபடிக்காக வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் நாங்குநேரியன் கால்வாய், பச்சையாறு மடத்து கால்வாயில் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரில் பூக்களை தூவி வரவேற்றனர். இதன்மூலம் 110 குளங்களும், 9 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ''களக்காடு பகுதியில் விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. கேரளாவை போன்று தமிழகத்திலும் காட்டு பன்றிகளை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காடு புலிகள் காப்பகம் என்பதால் வனத்துறையின் கட்டுப்பாடுகள் உள்ளன. இதுகுறித்து மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும்.

கீழ கருவேலங்குளத்தில் இருந்து பச்சையாறு அணைக்கு செல்லும் பாதையை சீரமைக்கவும், மஞ்சுவிளை- காமராஜ்நகர் இடையே பச்சையாற்றில் பாலம் கட்டவும் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகம்மது சபீர் ஆலம், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மண்கண்டராஜ், உதவி பொறியாளர் பாஸ்கர், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்