தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
சென்னை,
2022-23-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கம் கடந்த மாதம் (மே) இறுதியில் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. அந்த வகையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 12-ந்தேதியும் (நேற்றும்), 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந்தேதியும் (நாளையும்) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பள்ளிகள் மீண்டும் திறப்பு
அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இத்தனை நாட்கள் கோடை விடுமுறையில் குதூகலித்திருந்த மாணவ-மாணவிகள் நேற்று காலையே பரபரப்பாக பள்ளிகளுக்கு செல்ல தயாரானார்கள். தூங்கி கொண்டிருந்த சிறுவர்-சிறுமிகளுக்கு 'செல்ல அடி' கொடுத்து பெற்றோர் எழுப்பி ஆயத்தப்படுத்தினார்கள்.
அப்படி... இப்படி... என்று சலிப்புடன் வந்த மாணவர்கள், பள்ளி வாசலை தொட்டதுமே பரவசம் ஆனார்கள். தங்களது நண்பர்களை பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஆசிரியர்களை பார்த்து நலம் விசாரித்தனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் வகுப்புக்குள் நுழைந்தனர். அனைத்து பள்ளிகளிலும் நேற்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கோடை விடுமுறைக்கு பின்னர் வந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.
அமைச்சர் வரவேற்பு
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய மாணவிகளை வரவேற்கும் விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜாப்பூவும், இனிப்பும் வழங்கி வரவேற்றார். பின்னர் அவர்களிடம் கலந்துரையாடினார்.
விழாவில் அவர் பேசும்போது, ''கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. விடுமுறை காலங்களில் மாணவிகள் பலர் பல்வேறு கலை பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும், கம்ப்யூட்டர் உள்ளிட்ட இதர பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், இன்னும் சிலர் அடுத்த ஆண்டுக்கான பாடங்களை படிக்க தொடங்கி இருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தனர். இதை கேட்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதேபோல ஆர்வத்துடன் இந்த கல்வியாண்டை எதிர்கொண்டு பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும்'' என்று வாழ்த்து தெரிவித்தார்.
பாடப்புத்தகங்கள் வினியோகம்
பின்னர் பள்ளி மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டுக்கான பாட புத்தகங்களையும், அரசு அறிவித்த கற்றல் உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார். அப்போது மாணவிகள் அமர்ந்திருந்த இருக்கையில் அவர் அமர்ந்துகொண்டார். மாணவிகளுடன், தானும் புத்தகத்தை உயர்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியில் உள்ள நூலகம், சமையலறை உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளும் சரியாக இருக்கிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவிகளுடன் கலந்துரையாடி விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் உற்சாகம்
தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடனே காணப்பட்டனர். பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகளும் நேற்று முதல் தொடங்கியது. குறிப்பாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் நாளான நேற்று தாமதம் இன்றி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மாணவர்கள், பெற்றோர் நடமாட்டம் காரணமாக நேற்று காலை சாலைகளில் வாகன நெரிசல் பல இடங்களில் காணப்பட்டது.
அந்த வகையில் இந்த கல்வியாண்டின் தொடக்கம் நேற்று முதல் உற்சாகமாகவே தொடங்கியது.