தேங்காய் கொப்பரை கொள்முதல் கூடங்கள் திறப்பு

மதுரை மாவட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி வட்டாரங்களில் தேங்காய், கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட உள்ளன.

Update: 2023-03-31 18:36 GMT

மதுரை மாவட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி வட்டாரங்களில் தேங்காய், கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட உள்ளன.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

வேளாண்மை விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னை சாகுபடி வாடிப்பட்டி மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதிகளில் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவு காரணமாக தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர். இதனால் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசின் நெபட் நிறுவனத்துடன் இணைந்து கொப்பரை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று முதல் செப்டம்பர் மாதம் வரை அரவை கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 890 என்ற குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

வங்கி கணக்கில்

மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அரவை கொப்பரைக்கான கொள்முதல் இலக்கு தலா 100 டன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரைக்கான தொகையானது எவ்வித இடைத்தரகும் இல்லாமல் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொப்பரையை விற்பனை செய்ய உள்ள விவசாயிகள் தங்களின் புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களுடன் மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு சென்று இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பயனடையலாம்

தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சியடைந்து உள்ள இத்தருணத்தில் மதுரை மாவட்ட விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கொப்பரை கொள்முதல் வாயிலாக தங்களது அரவை கொப்பரைகளை விற்பனை செய்து பயனடையலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 9943446799 என்ற எண்ணிலும், மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 9629079588 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்