பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு 2-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

Update: 2022-12-31 18:01 GMT

அணைக்கட்டு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு 2-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

உத்திர அரங்கநாதர் கோவில்

வேலூர் அருகே பள்ளிகொண்டாவில் அரங்கநாயகி உடனுறை உத்திர அரங்கநாதர் கோவில் பாலாற்றங்கரை ஓரம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்கள் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

காஞ்சீபுரத்தில் 3 இரவுகள் தங்குபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று கூறுவார்கள்

ஆனால் பள்ளிகொண்டாவில் உள்ள உத்திர அரங்கநாதர் கோவிலில் ஒரு இரவு தங்கினாலே மோட்சம் கிடைக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளதாக ஆன்மிக பெரியவர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கோவிலில் கருவறையில் அரங்கநாதர் ஆதிசேஷன் மீது சங்கு சக்கரதாரியாக பெரிய அழகு திருமேனியுடன் ஆகிருதியாக நிமிர்ந்து படுத்து தெற்கில் சிரசும் வடக்கே திருப்பாதங்களும் வைத்து யோக சயனமூர்த்தியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி உள்ளார்.

சொர்க்கவாசல் திறப்பு

இத்தகைய சிறப்பு வாய்ந்த உத்திர அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு நாளை காலை 4 மணிக்கு மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு உற்சவர் புஷ்ப அலங்காரமும், காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் சேவையும் நடைபெறும். அந்த சமயத்தில் வாணவேடிக்கை நடக்கிறது.

திருவீதி உலா

காலை 7 மணிக்கு கருட வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக வேலூர், குடியாத்தம், ஆம்பூரில் இருந்து பள்ளிகொண்டாவுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் பாதுகாப்புக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

30-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களை கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விழா ஏற்பாடுகளை வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் நித்தியா, ஆய்வாளர் சுரேஷ்குமார், கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்