குப்பைகள் மறுசுழற்சி மையம் திறப்பு
வீரவநல்லூரில் குப்பைகள் மறுசுழற்சி மையம் திறக்கப்பட்டது.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பேரூராட்சியில் கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் சுகாதார பணிகள், வாறுகால் பராமரித்தல் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சள் பை ஆகியவற்றை வழங்கினார். சிறப்பான முறையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களை கௌரவித்தார். வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியில் மரக்கன்று நட்டார். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் வணிகர்கள், பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர், பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவை ஆட்சியர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், பேரூராட்சி தலைவி சித்ரா சுப்பிரமணியன், துணைத் தலைவர் வசந்த சந்திரா, சுகாதார ஆய்வாளர் பிரபாகரன், பேரூராட்சி கவுன்சிலர்கள், கிராம உதயம் ஆலோசகர் பகத்சிங் புகழேந்தி, தி.மு.க நகரச் செயலாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.