ரூ.62 கோடியில் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்

ரூ.62 கோடியில் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Update: 2022-10-08 19:00 GMT

ஊட்டி

ரூ.62 கோடியில் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலை

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாகவும் வாகனங்கள் சேர்ந்து வருகின்றன. இதனால் ஊட்டி- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருவதால் குன்னூர் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், மற்ற சாலைகளில் தடை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் வகையிலும் ஊட்டி- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன்னர் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் உருவாக்கப்பட்ட பாரம்பரியமிக்க இந்த வழித்தடம் கால மாற்றத்திற்கு ஏற்ப தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.35 கோடியும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.27 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் தற்போது 80 சதவீதத்தை தாண்டி உள்ளது.

கேபியான் தொழில்நுட்பத்தில் பாலம்

சுமார் 7 மீட்டர் இருந்த சாலை எங்கெல்லாம் இடம் உள்ளதோ அங்கு எல்லாம் அதிகபட்சமாக 10 மீட்டர் வரை அகலப்படுத்தப்படுகிறது. மேலும் சாலையோரம் தேவைப்படும் இடங்களில் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. இந்த பணிகள் முழுவதும் முடிந்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதேபோல் மண் சரிவை தடுப்பதற்காக சோதனை முயற்சியாக குன்னூர் மந்தாடா பகுதியில் உயர் தொழில்நுட்பத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. அதாவது கேபியன் வால் எனப்படும் கற்கள் மற்றும் துரு பிடிக்காத வலைக்கம்பிகளைக் கொண்டு கட்டப்படுகிறது. நாகாலாந்து மாநிலத்தில் இந்த முறையில் சுவர்கள் கட்டப்பட்டு நல்ல முறையில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இதே முறையைப் பயன்படுத்தி மந்தாடா பகுதியில் 86 மீட்டர் நீளம், 13 மீட்டர் உயரத்தில் கட்டியுள்ளோம். பொறியாளர்களைக் கொண்டு வடிவமைத்து சாலை விரிவாக்கத்தில் கிடைத்த கற்கள், ஜியோ பேப்ரிக், துருபிடிக்காத கம்பி வலை போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இது மாதிரி தொழில்நுட்பத்தில் தடுப்பு சுவர் கட்டப்படும்.

மேலும் ஊட்டிசேரிங்கிராஸ் பகுதியில் பாலம் அமைக்க வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் டி.ஆர். பஜார் முதல் கூடலூர் செல்லும் சாலை ரூ.76 கோடியிலும், மத்த இடங்களில் 20 கோடியில் சில்லரை வேலைகளும் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்