திமுக ஆட்சியில் டாஸ்மாக் திட்டம் மட்டும் வேகமாக போயிட்டு இருக்கு - முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சனம்
திமுக ஆட்சியில் டாஸ்மாக் விற்பனை மட்டுமே தொடர்ந்து நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
சிவகாசி,
அதிமுகவின் அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டு டாஸ்மாக் விற்பனை மட்டுமே தொடர்ந்து நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
சிவகாசி அருகே உள்ள சித்துராஜ புரத்தில், நடைபெற்ற அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய அவர், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் விடியல் தருவார் என புதிய வாக்காளர்களும், திமுக வரலாறு தெரியாதவர்களும் வாக்களித்ததாக தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மத்திய அரசுடன் சண்டை, கரப்ஷன், கலெக்ஷன் ஆகியவைதான் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் சாடினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "எல்லா திட்டங்களும் முடக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு திட்டம் மட்டும் ரொம்ப வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. அது டாஸ்மாக் திட்டம். ஒருநாளுக்கு இத்தனை கோடி விற்க வேண்டும் என்று இலக்கு வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்ற மக்கள் திட்டங்கள், மகத்தான திட்டங்கள் அத்தனையும் சரிந்து கொண்டிருக்கின்றன" என்று கூறினார்.