புத்தகங்களால் மட்டுமே அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்
புத்தகங்களால் மட்டுமே அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நாகையில் நடந்த புத்தக திருவிழாவில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேசினார்.
புத்தக திருவிழா
நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் அனைத்து வகையான புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
தினந்தோறும் மாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ் அறிஞர்களின் கருத்தரங்குகளும் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் தமிழக மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அறிவு சார்ந்த சமுதாயம்
அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக இதுபோன்ற புத்தக திருவிழா நடத்த வேண்டும். தமிழகத்தில் உயர்கல்வி படித்தவர்கள் 51 சதவீதம் பேர் உள்ளனர். புத்தகங்களால் மட்டுமே அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். அன்று மனிதன் செய்த வேலையை இன்று, எந்திரம் செய்கிறது.
உலக அளவில் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதை நாம் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் நேசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பட்டிமன்றம்
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் லியோனி தலைமையில் நிறைவான வாழ்வை தீர்மானிப்பது பட்டறிவே, படிப்பறிவே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.இதில் கலெக்டர் அருண்தம்புராஜ், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, திட்ட இயக்குனர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.