ஆன்லைனில் இளம்பெண்ணிடம் நூதன மோசடி
புதுக்கோட்டையில், ஆன்லைனில் ரூ.100-க்கு ஆசைப்பட்டு ரூ.8 லட்சத்தை நூதன முறையில் இளம் பெண் இழந்தார்.
ஆன்லைனில் வேலை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோட்டை பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் மனைவி சிந்து (வயது 25). இவரது செல்போனுக்கு ஆன்லைனில் வேலை பார்த்தால் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை நம்பிய சிந்து முதல் தவணையாக ரூ.200 செலுத்தியுள்ளார். அதற்கு ரூ.300 அனுப்பியுள்ளனர்.
ரூ.8 லட்சம் மோசடி
இதையடுத்து ரூ.200-க்கு 100 ரூபாய் கூடுதலாக கொடுத்திருப்பதால் பணத்திற்கு ஆசைப்பட்டு 43 தவணைகளில் ரூ.8 லட்சத்து 5 ஆயிரத்து 51 முதலீடு செய்துள்ளார். ஆனால் எந்த பணமும் திரும்பி வராத காரணத்தையடுத்து தான் ஏமாற்றப் பட்டதை அறிந்த சிந்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் பலமுறை எச்சரித்தும் ஆன்லைனில் இதுபோன்று வரும் தவறான தகவல்களை கொண்டு பணம் பரிமாற்றம் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டாலும் பணத்திற்கு ஆசைப்பட்டு தொடர்ந்து ஏமாறி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே இது போன்ற செல்போன்களில் வரும் தகவல்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.