ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: தமிழக சட்டசபைக்கு அதிகாரம் -சபாநாயகர் அப்பாவு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2023-03-11 00:33 GMT

சென்னை,

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டதால் இதற்கு தடை விதிக்க தமிழக அரசு முனைப்பு காட்டியது.

இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கவர்னர் திருப்பி அனுப்பினார்

பல நாட்களாக இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் மேலும் பலர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்தனர். எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே கவர்னர் கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை மறுத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 'சட்டசபையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று நேற்றுமுன்தினம் அறிவித்தார்.

அப்பாவு பேட்டி

இவ்வாறு தமிழக அரசியலில் ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபைக்கு அதிகாரம்

ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பான அவசர சட்டத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதே மாதம் 19-ந்தேதியன்று அதே அவசர சட்டம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் மசோதாவாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு28-ந்தேதி ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வளவு காலம் தாழ்த்தி அதை திருப்பி அனுப்பி இருக்கிறார். அது ஏன் என்று தெரியவில்லை.

மாநிலங்களில் அந்தந்த அரசுகள், அமைச்சரவையுடன் இணைந்து, வரம்புக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும் என்று கவர்னரின் உரிமைகள் பற்றி பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அரசியலமைப்பு சாசனத்தின் 200-ம் பிரிவில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கலாம், சந்தேகங்களை சரிபார்த்து கொள்ளலாம், ஜனாதிபதிக்கு அனுப்பலாம் அல்லது அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக புதிதாக சட்டம் கொண்டு வருவதற்கு சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்று கவர்னர் எந்த சட்டம் தந்த அதிகாரத்தின் கீழ் சொல்கிறார்? சட்டமன்ற மாண்புக்கு களங்கம் ஏற்படுவது போன்ற இப்படிப்பட்ட வார்த்தைகளை அவர் தவிர்த்திருக்கலாம். தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது. அரசியலமைப்பு சாசனத்தின் 200-வது பிரிவை கவர்னர் படித்து பார்க்க வேண்டும்.

ஐகோர்ட்டு உத்தரவு

அரசியல் சாசனம் 31-வது பிரிவில், மத்திய பட்டியலில், திறனுக்கான விளையாட்டு (கேம் ஆப் ஸ்கில்ஸ்) என்ற அம்சம் வருகிறது. அதில் மத்திய அரசுதான் செயல்பட முடியும். அந்த பிரிவின் அடிப்படையில் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று ஐகோர்ட்டின் உத்தரவை குறிப்பிட்டு கவர்னர் கூறியிருக்கிறார். ஆனால் 34-வது பிரிவில், மாநில பட்டியலில் வாய்ப்புக்கான விளையாட்டு (கேம் ஆப் சான்ஸ்) என்ற அம்சம் உள்ளது.

அவர் சுட்டிக்காட்டியுள்ள ஐகோர்ட்டின் அந்த தீர்ப்பு 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியானது. ஆனால் ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பான அவசர சட்டத்திற்கு 2022-ம் ஆண்டு அக்டோபரில் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்போது ஐகோர்ட்டின் உத்தரவை அவர் பார்க்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

முக்கிய விஷயம்

மேலும் 2021-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் அப்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 'ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மிக முக்கியமான விஷயம். எனவே மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி உடனே அதில் தலையிட வேண்டும். அது 'ஸ்கில்' (திறமை) விளையாட்டு அல்ல, 'கில்' (கொலை) விளையாட்டு' என்று குறிப்பிட்டார்.

அதோடு, கடந்த பிப்ரவரி 8-ந்தேதி மக்களவையில் தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கேரள எம்.பி. முரளிதரன் ஆகியோர் பேசும்போது, 'ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ரத்து செய்து, அதை ஒரு கொள்கையாக கொண்டு வர வேண்டும்' என்று மத்திய அரசை வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி, அது மாநில பட்டியலில் உள்ளது. மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்டது அல்ல. 17 மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றி உள்ளனர்' என்று கூறினார்.

அழுத்தம்தான் காரணம்

ஆக, ஐகோர்ட்டு உத்தரவு, துணை ஜனாதிபதியின் பேச்சு, மத்திய மந்திரியின் உரை ஆகியவற்றை கவர்னர் ஆர்.என்.ரவி படித்திருந்தால், தமிழக அரசின் அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தந்திருப்பார். அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்போது ஒரு நிலைப்பாட்டையும், சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கு மற்றொரு நிலைப்பாட்டையும் அவர் எடுத்திருக்கிறார்.

அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராகத்தான் கவர்னர் முழுமனதோடு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

பின்னர் அவரை ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்கள் வந்து பார்த்ததாக தகவல்கள் வந்தன. அதன் பிறகு ஏதோ அழுத்தம் ஏற்பட்டு தடை சட்ட மசோதாவை நிராகரித்திருக்கிறார். அந்த உரிமையாளர்கள்தான் திறமையாக செயல்பட்டு மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.

இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்