ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

Update: 2022-11-26 18:45 GMT

சட்டக் கல்லூரிக்கு புதிய கட்டிடம்

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.92 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் அரசு சட்டக்கல்லூரி புதிய கட்டிடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விடுதி கட்டிடம், ஆசிரியர்களுக்கான கட்டிடம், கலையரங்கம், விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் அடிக்கல் நாட்டினா். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசினர். அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி

தேசிய சட்ட தினம் கொண்டாடும் இந்நாளில், நாமக்கல் மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவது என்பது சிறப்பான ஒன்றாகும். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே அடிப்படையான சட்டத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

சட்டக்கல்லூரி கட்டிடம் மட்டுமல்ல, எல்லாவிதமான அடிப்படை வசதிகளோடு கல்லூரி கட்டிடம் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழக முதல்-அமைச்சரின் நோக்கம். அதே நேரத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி நிச்சயமாக அமைந்தாக வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் விருப்பம். எனவே வருகிற காலங்களில் நிச்சயமாக எல்லா மாவட்டங்களிலும், ஏதாவது ஒரு சட்டக் கல்லூரி இருப்பதற்கான வாய்ப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி தருவார்.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு

தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சட்டக்கல்லூரிகளில் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து சட்டங்களை படிக்கின்ற வாய்ப்பையும், அதில் பயணிக்கிற வாய்ப்பையும் மாணவர்களுக்கு உருவாக்கி தருகிறோம். இது குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பதிலே சட்டத்துறை அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு ஆகும். எப்படி புதுப்புது குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறார்களோ, அதற்கு ஈடுக்கொடுக்கும் வகையில் நம்முடைய வக்கீல்கள், நீதியரசர்களை தயார் படுத்துகின்ற பணியையும் சட்டத்துறை செய்கிறது.

அதேபோல பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு புதிய நீதிமன்றங்களையும் அமைத்து கொடுத்து, அதன் மூலமாக புதிய வக்கீல்களுக்கு பயிற்சி செய்வதற்கும், தொழில் பழகுவதற்கும், தொழில் நடத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கி தந்து கொண்டு இருக்கிறோம். அரசு பள்ளிகளில் படித்து வருகிற மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது மிகப்பெரிய வரப்பிரசாதம்.

பொன்னான திட்டம்

அதே நேரத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளிலேயே படித்து தற்போது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்குகிற பொன்னான திட்டத்தையும் தந்திருப்பவர் முதல்-அமைச்சர். தமிழகத்தில் 15 அரசு சட்டக்கல்லூரிகள், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், திருச்சியில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் என மொத்தம் 17 கல்லூரிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அது தவிர 9 தனியார் கல்லூரிகள் இருக்கின்றன.

எனவே தமிழகத்தில் யார் நினைத்தாலும் சட்டக்கல்வி எளிதாக படிக்கக்கூடிய அளவிற்கு கல்லூரிகள் அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் 700 பேருக்கு மட்டும் படிக்கக்கூடிய வாய்ப்பு இருந்த நிலையில் தற்போது அனைவருக்கும் சட்டக்கல்வி கிடைக்ககூடிய அளவில் சட்டக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. சட்டக்கல்வியின் தரம் குறைந்து விடாதபடி அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் முதுநிலை படிப்புகள் தொடங்குவதற்கு கட்டிட பணிகள் முடிந்த பிறகு தமிழக முதல்-அமைச்சர் அனுமதி தருவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விரைவில் ஒப்புதல்

தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விரைவில் பரிசீலனை செய்வதாக மத்திய சட்டத்துறை மந்திரி உறுதி அளித்து உள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்ட மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கவர்னரின் விளக்கத்துக்கும் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை சட்டத்துக்கு, விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கவர்னர் அழைத்தால் நேரில் சந்திப்பேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் அருண், நாமக்கல் நகர் மன்ற தலைவர் கலாநிதி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், முன்னாள் எம்.பி., பி.ஆர்.சுந்தரம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள் உள்பட அரசு வக்கீல்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்