'மீண்டு'ம் வந்த அவசர சட்டத்துக்கு வரவேற்பு ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தர கடிவாளம் கட்டாயம்

‘மீண்டு’ம் வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு வரவேற்பு அளித்துள்ளனா்.

Update: 2022-10-08 23:30 GMT


அன்று மகாபாரதத்தில் சூதாடி தர்மன் தனது மனைவி சகோதரர்கள், நாட்டை இழந்தான் என்பது புராணங்களின் தகவல். இதை புராணங்களின் கதை வடிவில் அறிந்தோம், நம் கண்களால் பார்க்கவில்லை. ஆனால், இன்று நம் கண் எதிரே சூது பல உயிர்களை குடித்துக்கொண்டு, இன்னும் பல உயிர்களை குடிக்க துடித்துக்கொண்டு உள்ளது.

தூண்டிலில் சிக்கிய மீன்கள்

இன்றைய காலக்கட்டத்தில் ஆன்லைன் ரம்மி, கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டியை மையமாக கொண்டு வரும் சூதாட்டங்கள், ஆன்லைன் லாட்டரி உள்ளிட்ட எண்ணற்ற சூதாட்டங்கள் ஆன்லைனில் குவிந்து கிடக்கிறது.

இந்த சூதாட்டத்தின் முதல் குறியே நடுத்தர குடும்பங்கள் தான். இவர்களை ஈர்க்க என்னென்ன திட்டங்கள் உண்டோ அனைத்தையும் செயல்படுத்துவார்கள். நம்மிடையே இந்த சூதுவை கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர்களாக, பிரபலமான நடிகர்கள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலங்கள் என்று பட்டியல் நீளுகிறது.

நமக்கு எதிரே மனிதர்கள் தான் விளையாடுகிறார்கள் என்று நினைத்து அவர்களது மூளையோடு நாம் போட்டியிடுவோம். ஆனால், அதுதான் இல்லை, ப்ரோக்ராம் செய்யப்பட்ட மிஷின்களே பெரும்பாலும் விளையாடுகிறது. தொடக்கத்தில் கிடைத்த வெற்றி என்கிற தூண்டிலில் சிக்கியவர்கள், பிறகு முழுவதும் மூழ்கிவிடுவதால், நகை, பணம் மட்டுமின்றி உயிரையும் இழந்து குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறது.

2020-ம் ஆண்டு தடை சட்டத்துக்கு தடைவிதிப்பு

இதனால், தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜிங்க்லி கேம்ஸ், ரீட் டிஜிட்டல், ப்ளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது ஒவ்வோரு ஆண்டும் சுமார் 20 பேர் வரை உயிரிழந்தும் சிறப்பு சட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு போட்டிகளை நடத்திவருவதை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டின. இந்த விளையாட்டு திறமையின் அடிப்படையில் நடப்பதாகவும் இதில் சூதாட்டம் இல்லையென்றும் வாதிடப்பட்டது.

2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒட்டுமொத்தமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி அந்த சட்டத்தை ரத்து செய்தது.

அதே நேரத்தில் உரிய சட்ட விதிகளுடன் புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு எனவும் தீர்ப்பில் தெரிவித்து இருந்தது.

மக்கள் கருத்துடன் வலுவான சட்டம்

இதன் பிறகு, கடந்த ஜூன் மாதத்தில் நிறைவடைந்த 10 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 23 பேரின் உயிரை இந்த ஆன்லைன் விளயைாட்டு குடித்து, இன்னும் பலரது உயிரை குடித்து வந்தது. இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலும் 2 பேர் பலியானது அதிர்ச்சியான ஒன்றாகும்.

இந்த சூழ்நிலையில் தான் தற்போதைய தமிழக அரசு மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக வலுவான ஒரு தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த முறை மக்களிடம் homesec@tn.gov.in என்கிற மின் அஞ்சல் மற்றும் நேரடியாகவும் கருத்து கேட்பு நடத்தி, அதன் மூலம் சட்டத்தை நிறைவேற்றி, இதற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது.

ஏனெனில் இந்த சட்டம் மக்களின் கருத்துகள் மற்றும் ஆய்வு குழுவின் அறிக்கையின் படி இயற்றப்பட்டதாகும். ஆகையால் இதை எதிர்த்து சில சூதாட்ட நிறுவனங்கள் கோர்ட்டுக்கு சென்றாலும், அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு பெறுவது என்பது கடினம் தான்.

அதே வேளையில், ஆன்லைன் சூதாட்டத்தை கண்காணிக்க ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். இந்த ஆணையம் தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்கு தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுக்கு வழியில் நுழையும்

நிச்சயம் இந்த ஆணையம் செயல்படுவது வரவேற்க தக்கதாகும். ஏனெனில் செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை இருந்தாலும், நாம் தமிழகத்தில் இருந்தே அந்த செயலியை விளையாடுவதற்கான வாய்ப்பை சில சூதாட்ட நிறுவனங்கள் அளிக்கும்.

அதற்கான செயலியில்(அப்) நாம் வேறு ஒரு மாநிலத்தில் வசிப்பதாக தரவுகளை மாற்றி பதிவு செய்யவும் அவைகள் வாய்ப்புகளை அளித்து, வலை விரிக்கதான் செய்கிறார்கள். இது கடந்த 2020-ம் ஆண்டு தடையின் போதே நடந்தது.

இதில் வேடிக்கை என்ன என்றால், நாம் வங்கி தமிழகத்தில் இருந்தாலும், கேரளா, புதுச்சேரி போன்ற பிற மாநிலத்தில் செயல்படுவது போன்றும் மாற்றி அமைத்து விளையாடுவதற்கும் வாய்ப்புகளை அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்