தர்மபுரி உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி

Update: 2023-07-28 19:30 GMT

தர்மபுரி உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.80- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம்

தர்மபுரி மாவட்டத்தில் அதகபாடி, முள்ளுவாடி, பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, திப்பம்பட்டி, தொப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்படைந்தது. இதனால் தர்மபுரி உழவர் சந்தை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பிற உழவர் சந்தைகளுக்கு சின்ன வெங்காயம் வரத்து பெருமளவில் குறைந்தது.

இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.180 முதல் 160 வரை விற்பனையானது. இதனால் சின்ன வெங்காயம் என்று நினைத்தாலே பொதுமக்களின் கண்ணில் தண்ணீர் வரும் அளவுக்கு விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பெண்கள் வீட்டு சமையலில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை வெகுவாக குறைத்து விட்டனர். அதற்கு பதிலாக பெரிய வெங்காயத்தை அதிக அளவில் சேர்க்க தொடங்கிவிட்டனர்.

விலை வீழ்ச்சி

இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்தது. இதன் காரணமாக தர்மபுரி உழவர் சந்தை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளுக்கு மீண்டும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்தது.

இதனால் கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை தற்போது எதுவாக குறைந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உழவா் சந்தைகளுக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தரத்துக்கு ஏற்றார் போல் ரூ.90 வரையிலும் சின்ன வெங்காயம் விற்பனை ஆகிறது. தொடர்ந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்தால் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று வெளி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. திருப்பூர், பல்லடம் போன்ற பகுதிகளில் உற்பத்தியாகும் சின்ன வெங்காயம் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்