தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் - போலீசார் வழக்கு பதிவு
விபத்தில் கரிமேடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் (52) என்பவர் உயிரிழந்தார்.;
சென்னை,
சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்து சிதறியதை அறிந்த ஊழியர்கள் தொழிற்சாலையில் இருந்து அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
விபத்து குறித்து தண்டையார்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் கரிமேடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் (52) என்பவர் உயிரிழந்தார். 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் ஐ.ஓ.சி நிறுவனத்தில் 2 பாய்லர்கள் வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் இயற்கைக்கு மாறான முறையில் மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.